விருது

ஏப்ரல் 15, 2008

தடுமாறும் தமிழ்ப் புத்தாண்டு

Filed under: Uncategorized — விருது @ 8:29 முப

Tuesday April 15 2008 00:00 IST

தினமணியில் 15 ஏப்ரல் 2008 செவ்வாய்கிழமை வெளிவந்த திரு. நெல்லை முத்து அவர்களின் கட்டுரை.   இந்த கட்டுரையாளர் ஸ்ரீஹரிகோட்டாவின் விஞ்ஞானி ஆவார்.

தடுமாறும் தமிழ்ப் புத்தாண்டு – ஓர் அலசல்

நெல்லை சு. முத்து

தமிழ்ப் புத்தாண்டு என்பதும், தமிழர் புத்தாண்டு என்பதும் இன்று வெவ்வேறு மாதிரி என்று ஆகிவிட்டது. இந்தப் பிரச்னையை அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும்தான் அனைவரும் அணுகுகிறார்களே தவிர விஞ்ஞான ரீதியாக அணுகத் தயங்குகிறார்கள்.

பகுத்தறிவு பேசுபவர்களும், விஞ்ஞானம் பற்றிப் பேசுபவர்களும் இந்த விஷயத்தில் அரசியல்தான் பேசுகிறார்கள் என்பதுதான் வேடிக்கை.

இந்த மாதம் ஏப்ரல் 5 அன்று சந்திரன் சூரியனுக்கு அண்மையில் வசித்தது. “அண்மை வாசி’ தானே அமாவாசை? ஏப்ரல் 20 அன்று சந்திரன், சித்திரை நட்சத்திரத்தில் நிலைப்பதாகத் தோன்றும். கன்னி (virgo) உடுக்கணத்தில் “ஆல்ஃபா வெர்ஜினிஸ்’ என்னும் விண்மீனே நாம் கூறும் சித்திரை. இதற்கு வானவியலில் “ஸ்பைக்கா’ ( Spica) என்றும் பெயர். அதுவே பண்டைய சித்திரை மாதத் தொடக்கம். சந்திரன் சஞ்சரிக்கும் உடுக்கணத்தின் பெயராலேயே அந்தந்த மாதத்தை நாம் “திங்கள்’ என்று குறிப்பிடுகிறோம்.

அவ்வாறே, அடுத்த பௌர்ணமி அன்று (2008 மே 19) விசாக நட்சத்திரத்தில் தோன்றும். அந்த “விசாக’ மாதம் வைகாசி என்கிறோம். இது எல்லாம் நம் நாட்காட்டிகள் தரும் தகவல்கள் தாம். ஆனால் விஷயம் அது அல்ல.

பண்டைத் தமிழர் வானவியல் ஆதாரப்படி, தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் சித்திரை தான். தமிழ்ச் சங்க இலக்கியங்களில் நெடுநல்வாடை எனும் சங்கப் பாடல் காட்டும் ஓர் உண்மை இங்கு முக்கியம் ஆனது. “”ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரு வீங்கு செலன் மண்டிலம்” (160 – 161) என்கிற வரிகளில் பண்டைய தமிழர் வானவியல் திறன் விரிகிறது. கோப்பெருந்தேவியின் கட்டிலுக்கு நேர் மேலாக “ஆடு தலை’யாகப் பன்னிரெண்டு உடுக்கணங்கள் தோற்றமும் விதான ஓவியமாகச் சித்திரிக்கப் பெற்றுள்ளது. அதில் மேஷம் ( Aries) ஆகிய ஆடு உருவம் கொண்ட தலையாய உடுக்கணம் முதலில் சுட்டப் பெறுகிறது.

ஆனால் சித்திரை முதல் தேதி என்பது ஏப்ரல் 13 ஞாயிறு, அரசு விடுமுறை – தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு என்று நாட்காட்டிகள் அசடு வழிந்தன. உள்ளபடியே ஆண்டுத் தொடக்கம் மட்டுமல்ல, நாட்காட்டிகளும், நாள் கணக்குகளுமே காலந்தரமாகத் திருத்தப்பட வேண்டியது அவசியம்.

இப்படி ஆண்டு, மாதம், நாள் கணக்குகளை மாற்றுவது சரியா? என்றால் வரலாற்றில் இத்தகைய செய்திகள் நடந்தேறி இருக்கின்றன.

பூமி சூரியனைச் சுற்றி வர ஆகும் 365.242 சூரிய நாள்களைப் பண்டைய உரோமானியர் பத்து சம பாகங்கள் ஆக்கி மாதங்களாக வகுத்தனர். அந்தப் பத்து மாதங்களுக்கு முறையே மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு என மன்னர்கள், தெய்வங்கள் பெயர்களைச் சூட்டினர். பின்னர் ஏழாவது (“சப்த’ – செப்டம்பர்), எட்டாவது (“அஷ்ட’ – அக்டோபர்), ஒன்பதாவது (“நவ’ – நவம்பர்), பத்தாவது (“தச’ – டிசம்பர்) என்ற அடிப்படையில் கிரேக்கப் பெயர்களால் குறிப்பிட்டனர். இங்கு வடமொழிச் சொற்களும் கிரேக்கப் பெயர்களும் ஒலி அமைப்பில் ஒத்துப் போகின்றன என்பது ஆய்வுக்கு உரியது.

எப்படியோ, பிற்காலத்தில் ஆண்டு பன்னிரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. இறுதி இரண்டு மாதங்களுக்குப் புதிதாக ஜனவரி, பெப்ரவரி என்ற தெய்வப் பெயர்கள் சூட்டப்பெற்றன.

எனினும், பிற்காலத்தில் எட்டாம் போப் கிரகோரி என்பவர் “கூதிர் சந்தி’ அடிப்படையில் கிரகோரியன் நாட்காட்டி ( Gregorian calender) ஒன்றை வரையறுத்தார். வானத்தில் தென்கோடியில் சூரியன் விலகிய பின் மீண்டும் வடக்கு முகமாக ஏறத் தொடங்கும் நாள் “கூதிர் சந்தி’ ( winter solstice). இது டிசம்பர் 21 அன்று நிகழும்.

இன்றைக்குத் திருவள்ளுவர் ஆண்டு மாதிரியே அன்றைக்குக் கிறிஸ்து பிறந்த நாளையொட்டி ஜனவரி முதல் நாள் அந்த நாட்காட்டியின் முதல் நாள் ஆயிற்று. டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவது பிந்தைய வரலாறு. அந்த நாட்காட்டியில் ஜனவரி தொடங்கிப் பத்தாவதான டிசம்பர் பன்னிரண்டாம் மாதமும் ஆயிற்று.

விஷயத்துக்கு வருவோம். பூமி சூரியனைச் சுற்றி வருவதால் இங்கிருந்து கவனிப்போருக்குச் சூரியன் வானில் வெவ்வேறு விண்மீன் கூட்டங்களின் ஊடாகப் பயணம் செல்வது போல் தோன்றும். இதுவே சூரியவீதி. அதனைப் பன்னிரண்டு சம பிரிவுகளாகப் பகுத்து அவற்றிற்கு “”ராசி வளையம்” ( zodiac) என்று பெயரிட்டு வழங்குகிறோம். ஆயின், சூரியனின் இந்த சஞ்சாரத்தை இரவில் விண்மீன்களிடை காண்பது இயலாது அல்லவா? ஆதலால் சூரியனுக்குப் பதிலாக நமது திங்களாகிய சந்திரன் பௌர்ணமியாக இயங்குவதைக் கவனித்தனர் நம் முன்னோர்.

சூரியன் வடக்கு நோக்கிய உத்தராயணப் பயணத் தொடக்க நாளில் பூமியில் இரவுப் பொழுதும், பகற்பொழுதும் சமமாக 12 மணி நேர அளவாக அமையும். இதுவே வசந்த சமநோக்கு நாள் ( vernal equinox). சங்க காலத்தில் அந்த வசந்த சமநோக்கு நாளில் சூரியன் மேஷ ராசியில் இயங்கியது. சித்திரைத் திருவிழா இதுவே.

ஆனால் இந்த வசந்த சமநோக்கு நாளில் வானவியல் சம்பவங்கள் இன்றைக்கு 2008 மார்ச் 21 அன்றே நிகழ்ந்துவிட்டன. சங்க காலத் தமிழர் கணக்குப்படி பங்குனி மாதமே தமிழ்ப் புத்தாண்டு பிறந்துவிட்டது.

இங்கு தான் உதைக்கிறது. அதற்குத் தீர்வாக, வானவியல் கருத்துகள் சிலவற்றை ஆராய்வோம். பூமியும் சூரியனும் தொடர்ந்து இடம் பெயர்ந்த வண்ணம் இருக்கின்றன. இன்று நமக்கு நிலையானதாகத் தோன்றும் “போலாரிஸ்’ ( polaris) துருவ நட்சத்திரமே நிலையானது அல்ல. கி.மு. 4000 – 3000 வாக்கில் காளைமுகத் தோற்றங் கொண்ட “ரிஷப’ ( CPT) ராசியில் வசந்த சமநோக்கு நாள் அமைந்தது. அன்றைக்கு தூபான் ( Thuban) எனும் விண்மீனே நம் துருவ நட்சத்திரமாக இருந்தது.

இதில் இன்னொரு வேடிக்கை. கி.பி. 14000 ஆண்டில், அதாவது இன்றிலிருந்து சுமார் 12000 ஆண்டுகளுக்குப் பிறகு – “”அபிஜத்” ( Vega) எனும் விண்மீனே நமது புதிய துருவ நட்சத்திரமாக நிலைபெறுமாம்.

பூமியின் சுழற்சி அச்சு தலையாட்டம் போடுவதனால் அதன் துருவ நட்சத்திரமும் இவ்விதம் இடம் மாறி வருகிறது. சராசரியாக ஒவ்வொரு 2000 ஆண்டுகளுக்கும் ஒருமுறை வீதம் மெல்ல வசந்த சமநோக்கு நாள் ஒவ்வொரு ராசியாக முன்னேறி வருகிறது. 4000 ஆண்டுகளுக்கு முன்னால் இடபம், 2000 ஆண்டுகளுக்கு முன்பு மேஷம், இன்று மீனம்.

அவ்வாறே, அன்றைய குளிர்காலச் சம்பிரதாயங்களான தைந்நீராடல், தைப்பொங்கல் முதலிய நிகழ்ச்சிகள் இன்று மார்கழிக் குளிர்காலப் பூசைகள், பண்டிகைகள் ஆகிவிட்டன. பண்டைய கார்த்திகை ஒளிவிழாக்கள் தீபாவளி என்ற பெயரில் ஐப்பசியிலுமாக முன்னேறி வருகின்றன. அதாவது இன்று வசந்த சமநோக்கு நாளில் சூரியன் மேஷ ராசியில் இல்லை. மீனத்தில் இருக்கிறது. உள்ளபடியே, சூரியனின் உத்தராயண சஞ்சாரம் தொடங்கி ஒரு மாதம் ஆயிற்று.

அவ்வாறே, ஆறு மாதங்கள் வடக்கே சஞ்சரித்த சூரியன் செப்டம்பர் 21 அன்று தெற்குப் பயணம் தொடங்கும். அதுவே இலையுதிர் சமநோக்கு நாள் ( Autumnal equinox). மூன்று மாதங்கள் கழித்துச் சூரியன் தெற்கே 23.5 பாகை தாழ்ச்சியினைத் தொடும். தென்கோடியில் சூரியன் இறங்கிய பின் மீண்டும் வடக்கு முகமாக ஏறத் தொடங்கும் நாள் “கூதிர் சந்தி’ ( Winter solstice). டிசம்பர் 21 அன்று நிகழும் பண்டைய நாளில் இது மகர ராசியில் நிகழ்ந்தது. அதனைக் “காப்ரிகார்னஸ்’ ( Capricornus) என்பர்.

ஆழ்கடல் நன்னீரோட்டத்தின் கடவுளாகக் கருதப்படும் பாபிலோனிய “”இயா” ( Ea) எனும் தெய்வக் குறியீடு மகரம் எனும் நீர்ப்பிராணி. செம்மறியாட்டின் உடலும், மீனின் வாலும் கொண்ட அபூர்வத் தோற்றத்துடன் அது சித்திரிக்கப்பட்டது. அதன் பெயராலேயே 23.5 பாகை தெற்கு அட்ச ரேகைக்கு மகர ரேகை என்று பெயர். இன்று இது “தனுசு ரேகை’ என்று பெயர் மாற்றப்பட வேண்டும்.

திருவள்ளுவர் காலத்தில் வசந்த சமநோக்குநாள் மேஷத்தில் நிகழ்ந்தது. இலையுதிர் சமநோக்கு நாள் துலாம் உடுக்கணத்தில் ஐப்பசித் திங்களில் நிகழ்ந்தது. கூதிர் சந்தி மகர ராசியில் நிகழ்ந்தது. அதுவே தை மாதம். ஆனால் இன்றோ, திருவள்ளுவ ஆண்டின் அந்தக் குளிர்காலச் சந்தியானது முன் கூட்டியே மார்கழியில் (டிசம்பர் 21 வாக்கில்) நிகழ்ந்து விடுகிறது. அப்போது சூரியன் தனுசு ராசியில் நிலைபெறுகிறது.

ஆதலால் இனி, மகர சங்கராந்திக்குப் பதில் “தனுசு சங்கராந்தி’யில் மார்கழி மாதமே உழவர் திருநாளாகிய “தைப்பொங்கல்’ கொண்டாடி விடுவது தான் நியாயம். அதாவது டிசம்பர் மத்தியில் “புதிய’ தை மாதமும் வர வேண்டும். தமிழர் போற்றும் திருவள்ளுவர் ஆண்டு அதாவது டிசம்பர் 21 அன்று தான் கொண்டாடப்பட வேண்டும்.

பகுத்தறிவு, விஞ்ஞானம் என்று பேசுபவர்கள் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினால் முறையாக வானசாஸ்திர ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இப்போது நிகழ்த்த முயற்சித்திருக்கும் மாற்றங்கள் அரசியல்தானே தவிர விஞ்ஞானபூர்வமானதல்ல!

(கட்டுரையாளர்: விஞ்ஞானி, ஸ்ரீஹரிகோட்டா)

Advertisements

3 பின்னூட்டங்கள் »

 1. Superb!!!

  பின்னூட்டம் by Geetha — ஏப்ரல் 17, 2008 @ 5:26 முப | மறுமொழி

 2. Very detailed analysis. I really appreciate the author. Thanks for posting this.

  பின்னூட்டம் by Lakshminarayanan — ஏப்ரல் 17, 2008 @ 8:31 முப | மறுமொழி

 3. im from srilanka ,,,,
  we celebrate new year..april 14

  பின்னூட்டம் by tamilhidu — ஜனவரி 11, 2010 @ 7:57 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: