விருது

ஏப்ரல் 11, 2008

வார்த்தை பாடம்

திண்ணையில் சென்சார் செய்யப்பட்டு வந்துள்ள என் கட்டுரையின் முழு பாகம் இதோ

 

 

=====================

வார்த்தை பாடம்

 

ரொம்ப நாட்களாக என் மனைவிக்கு கனமான இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது.  வெறும் முத்து காமிக்ஸ் படித்து வளர்ந்த நாம் இன்று வெறும் கல்கண்டு, ராணிக்கதிர் அளவில் முடங்கிவிட்டது ஏதோ மட்டமோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது.    நாம் பழகும் சமூகத்தில் இலக்கியவாதியாக பந்தா பண்ண வழியில்லாமல் இருந்தது மிகவும் துக்ககரமான ஒரு விஷயம்.

 

இந்த சூழலில் வார்த்தை பத்திரிக்கை ஆரம்பிக்கப்போகிறார்கள் என்று கேட்டதும் படு உத்சாகம் அடைந்தாள் மனைவி.  காரணம், சகாய சந்தாவில் வருஷத்துக்கு நூறு ரூபாய்தான்.  எடைக்குப்போட்டால் ஒரு முப்பது ரூபாய் தேறினால், நெட் எழுபது ரூபாயில் கனமான இலக்கியம் படிக்கலாம் என்று கணக்குப் போட்டு விளக்கினாள்.  எனக்கு இது கசக்கவில்லை, சரியான ஐடியாவாகவே பட்டது.

 

வார்த்தை இதழ்பணத்தைக் கட்டியதும் அழகான ப்ளாஸ்டிக் உறையில் போட்டு மஞ்சள் கலர்  பத்திரிக்கை ஒன்று தந்தார்கள்.  இதோ வார்த்தை  பத்திரிக்கை வாங்கியிருக்கிறேன் பாருங்கள் என்று அழகாக எல்லோருக்கும் தெரியும்படி பஸ்ஸில் பிடித்துக்கொண்டே வீடு வந்தேன்.

 

கனமான இலக்கிய தாகம் அடங்காமல் பெருகியது. இரண்டு நாட்கள் கவனமாக பரிக்ஷைக்கு மாதிரி உட்கார்ந்து படித்தேன்.

 

ஒரு மாலையில், என் பார்யாள் என் ஈடுபாட்டைப் பார்த்து பொறாமைப்பட்டாள். “நீங்கள் கனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா?”   என்றாள்.  என்.எஸ்.கே ஸ்டைலில் “சரிவா, உக்காரு!” என்றேன்.

 

புத்தகத்தை வாங்கி பய பக்தியுடன் பார்த்தாள்.

 

பார்த்ததும் அவளுக்கு ஒரு நிராசை “அய்ய! என்னங்க இது பத்து பைசா பாட்டு புத்தகம் மாதிரி பேப்பர் எல்லாம் உங்க கலர்ல இருக்கு.  கொஞ்சம் நல்ல பேப்பர்ல போடப்படாதா!” என்றாள்.

 

எனக்கு கோவம்…  “ஆமாம், படமெல்லாம் உன் கலர்ல போட்டிருக்கிறாங்க இல்ல… ஒன்னுமே விளங்காம. இருட்டா…அதுக்காகத்தான்…” என்றேன்.

 

சபாஷ் சரியான பதிலடி என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

 

ஒரு பக்கத்தைத் திறந்து ஆவலாகப் படித்தாள்,  “என்னங்க, ஒன்னுமே புரியலையே!”

 

“திரைப்படம், விஞ்ஞானமும், கலையும் சரிவிகிதத்தில் புனைந்த ஒன்றாக இருப்பதால், நாள்தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் விஞ்ஞானம் தன்னுடன் சேர்ந்து இயங்கும் படைப்பாற்றலின் உத்திகளையும் மாற்றிக் கொள்ள வேண்டிய தேவையை முன்வைக்கிறது”

 

“என்னங்க சொல்றாரு இவரு?” என்று விழித்தாள் மனைவி.

 

“அசடு!  இதுதான் கனமான இலக்கிய மொழி.  கொஞ்சமும் லகுவா புரியக்கூடாது.  இப்போ இதையே “திரைப்படத்தில் விஞ்ஞானம் முக்கியமாக இருப்பதால் படைப்பு உத்திகள் மாறிக்கொண்டே இருக்கின்றன” என்று சொல்லலாம்தான்.  இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான்.  ஆனால், நான் சொன்னது குமுதம் பாஷை.  அதாவது மட்டம்! அதை எப்படியாவது விலக்க வேண்டும். அதையே சுத்தி சுத்தி இப்படி எழுதினால் அது வார்த்தை இலக்கியம்.  புரியுதா!”.

 

சரி என்று தலையாட்டினாள்.

 

இப்ப புரிந்துவிட்டது அவளுக்கு. 

 

எல்லாவற்றையும் தலைகீழாக சுற்றி எழுதவேண்டும், அவ்வளவுதான்.  “புதிய சாத்தியங்கள் ஏற்படுகின்றன” என்று எழுதக் கூடாது  “புதிய கண்டுபிடிப்புகளின் வழியே நிகழும் இம்மாற்றம் திரைப்படங்களின் இயல்மொழியில் புதிய சாத்தியங்களை அறிமுகப்படுத்துகிறது” என்று மாற்றத்தை முன்வைத்து எழுதவேண்டும். சரிதானே!

 

நன்றாகப்புரிந்தது.  இதோ பாருங்கள் “இயக்குனரின் உத்தியை நுட்பங்கள் காட்டுகின்றன” என்று சொல்லக் கூடாது.  “நுட்பங்கள் எப்போதும் அதனை இயக்குபவரின் கட்டளையே செய்துமுடிக்கின்றன” என்று எழுதவேண்டும்.  அதாவது, எல்லா அனிச்சைகளையும் செய்பொருட்களாக்கி விட வேண்டும்… அவ்வளவுதானே!” என்றாள்.

 

“க.க.கொ.க” என்றேன் (கச்சிதமாய் கவ்விக்கொண்டாய் கள்ளி!) என்று சிலாகித்தேன்.

 

சரி, இந்த கட்டுரையை முழுதுமாக படித்தாயா?

 

“ஐயோ, அது ஆகாத காரியம்.  அந்த கட்டுரை பதினோரு பக்கம் போகிறது.  மூன்றாவது பக்கத்தைத் தாண்டினால் எனக்கு தமிழே மறக்கிறது.. என்னால் ஆகாது!  ” என்றாள்.

 

“சரி விடு, கவிதை படிக்கலாம் வா”

 

ஆழ்ந்து படித்தவள்,  “யாருங்க இது சல்மா!  கண்ணா பிண்ணா என்று வரிகளா எழுதியிருக்காங்க?”

 

“அய்யோ, அப்படி பேசப்படாது!  அவங்க பெரிய்ய கவிஞி! கவிஞி என்றால் அதுவும் அரசியல்-கவிஞீ என்றால் தடால், தீடீல் என்று ஷாக் கொடுத்துதான் கவிதை எழுத வேண்டும்.  அப்போதுதான் பேசப்படுவாய்” என்றேன்.

 

“அதில்லீங்க!  என்னதான் ஆபாசமா எழுதினாலும் கொஞ்சம் அர்த்தமாவது வேண்டாமாங்க..  “ஒடிந்து தளும்பும் மார்புகள்” ன்னா என்னங்க அர்த்தம்?  ஒடியுதா, தளும்புதா இரண்டும் ஒரு சேர எப்படீங்க” என்றாள்.

 

சரி, இது வேலைக்கு ஆவாது என்று சப்ஜெக்டை மாற்றினேன்.. “சரி சரி, கேள்வி பதில் படி”

 

பார்த்தவள்,  “என்னங்க இந்தாளு எல்லா கேள்விக்கும் ஒரே மொக்கையா பதில் சொல்றாரு”.

 

“அய்யோ, அப்படி சொல்லாதே,  அவரு ஒரு அறிவுஜீவி இலக்கியவாதி”

 

“சாரி சாரிங்க தெரியாம சொல்லிட்டேன்.  அவர்கிட்டே, ஜெயமோகன் குறித்து கேட்டா “நான் விமர்சகன் அல்ல” என்கிறார்.  இளையராஜாவைப் பற்றி ஏன் எழுதவில்லை என்று கேட்டால் “எல்லாவற்றையும் எழுதுவது அவசியமா” என்கிறார். “வாரிசு அரசியலுக்கு என்ன முடிவு” ன்னு கேட்கிறாங்க,   “எல்லாத்துக்கும் முடிவு உண்டு” என்று மட்டும் சொல்கிறார்.  மொத்தத்தில் பதில் சொல்ல இஷ்டப்படாமல் உங்கம்மா மாதிரியே கழுந்துத்தனமா மொக்கை போடறாரே அப்படின்னு தோணியது.  அதான் சொன்னேன்.  அவரை குத்தமா இல்லைங்க.”

 

“நீ கனமான இலக்கியம் கத்துக்கும் போது அனாவசியமாக நீ என் அம்மாவை இழுக்காதே” என்று கண்டித்தேன்.  குனிந்து நான் பார்க்காமல் அவள் சிரித்தது புரிந்தது.

 

“சரிங்க.. விடுங்க..  ஒன்னும் வேண்டாம்… எனக்கு கதை தாங்க பிடிக்கும்.. நான் அதையே படிக்கிறேன்” என்றாள்.

 

விடாது ஐந்து கதைகளையும் படித்தவளுக்கு கடைசியில் ஒரு டவுட்…

 

“ஏங்க!  இந்த கதைகளிலே கனமான இலக்கிய கதை எது என்று எப்படீங்க கண்டுக்கறது” என்றாள்.

 

“அது ரொம்ப சுலபம்… எந்த கதையிலாவது யாராவது சோரம் போவாங்களே” என்றேன்.   ஆச்சரியப்பட்டாள்!!  “அட ஆமாங்க…. இருக்குங்க… அதுவும் குடும்பத்தோட போறாங்க”.

 

“அப்புறம் என்ன சந்தேகம்!  அதுதான் கனமான இலக்கிய கதை… புரிந்ததா” என்றேன்.

 

என் அறிவை அறிந்து என்னை மதிப்பாக பார்த்தாள் என் இடதுபக்கத்துக்காரி!

 

நேரமாகி விட்டிருந்தது..  என் தம்பி வந்தான்.. அவனுக்கு ஒரு சந்தேகம். “அண்ணா,  வார்த்தை என்பது திராவிட வார்த்தையா,  ஆரிய வார்த்தையா?” என்றான்.

 

“குழப்பமான வார்த்தை” என்றேன்.

 

“அப்படிச்சொல்வதை விட,  தெளிவற்ற மற்றும் ஒவ்வாத பல்வேறு கோணங்களில் முன்வரும் உத்திகளின் கட்டளைகளை உள்வாங்கி புதிய சாத்தியங்களை அறிமுகப்படுத்துவதே வார்த்தை” என்றாள் என் மனைவி.

 

நான் பாய்ந்து அவள் கைகளை பற்றினேன்..  “நீ எங்கேயோ போய்விட்டாய்.  இவ்வளவு சீக்கிரம் கனமான இலக்கியவாதியாகிவிட்டாயே. க.க.கொ.க ” என்றேன்.

 

“சரி, சரி! வாங்க..  சாப்பிட… சீரியலுக்கு டயமாச்சு… அபிக்கு என்னாச்சோ!” என்று கவலையோடு எழுந்தாள் மனைவி.

 

சபை கலைந்தது.

Advertisements

4 பின்னூட்டங்கள் »

 1. தமிழ்நாட்டில் தற்போது பகடி எழுதத் தெரிந்த ஒரே ஆள் நீங்கள்தான், ஜயராமன் சார் !

  மற்ற எழுத்தாளர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கிடையே நடக்கும் சண்டையில்தான் பகடி இருக்கிறது. அவர்களது எழுத்துக்களில் அது இல்லை.

  கலக்குங்கள் !

  பின்னூட்டம் by பனித்துளி — ஏப்ரல் 11, 2008 @ 7:13 முப | மறுமொழி

 2. உங்களின் மறுமொழிகளை இட்லிவடை மற்றும் சில தளங்களில் வாசித்திருக்கிறேன். இன்றுதான் உங்களை வாசிக்கத்தொடங்கினேன். இந்த பதிவு மிகவும் நன்றாக வந்திருக்கிறது. வார்த்தை படிக்கவில்லையாயினும் அதன் உட்பொருள் எப்படி இருக்கும் மிக தெளிவாகவே புரிகிறது. கனமான இலக்கியம் குறித்த உங்கள் நகைச்சுவையையும் ரசித்தேன். மிகவும் நன்று.

  பின்னூட்டம் by sivaraman — ஏப்ரல் 14, 2008 @ 10:42 முப | மறுமொழி

 3. சிவராமன் ஐயா,

  /// இன்றுதான் உங்களை வாசிக்கத்தொடங்கினேன்.///

  தங்கள் புத்தம் புதிய வருகைக்கும் தங்கள் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. வார்த்தை பத்திரிக்கையை ஒருதடவை வாங்கிப்பாருங்கள். அதன் சுகம் (!) தெரியும்.

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — ஏப்ரல் 14, 2008 @ 11:04 முப | மறுமொழி

 4. அருமை போங்க… குறிப்பாக ‘தீரா’விடம் சம்பந்தப்பட்ட தங்கள் பதிவுகள்.. இந்த ‘தீரா’விட அரசியல்’வியாதிகளின்’ பாணியில் “வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்” 🙂

  பின்னூட்டம் by ஸ்ரீராம் முரளி — ஏப்ரல் 15, 2008 @ 11:21 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: